யச்சி – காரெழில் ஈங்கவன்

மலையின் பிரவாகத்தின் மூச்சுத்திணறடிக்கும் அழுத்தத்தில் அமுங்கிப்போன பரிதாபமான நோஞ்சான்போல் நீண்டுபோன அந்த ஒற்றையடிப்பாதையின் இருபுறமும் அதன் குரல்வளையை நெறிப்பதுபோல் விளைந்திருந்த கமலா ஆரஞ்சு, நார்த்தங்காய், பலா மரங்களும், உன்னிமுள் செடிகளும் இந்த ஒற்றையடிப்பாதையை தங்களின் அமானுஷ்ய கண்களால் முறைப்பதுபோலவும், தங்கள் இலைகளாலும் கிளைகளாலும் ஆன நாக்குகளை ஒரு பல்லியைப்போல் நீட்டி விழுங்கிவிடப்போவதுபோலவுமான பாவனையில் விரிந்து கிடந்தன. அப்பாதையின் நடுநடுவே முட்டையை விழுங்கிய பாம்பின் வயிற்றைப்போல் சிறு பாறைகள் முளைத்துக்கிடந்தன. அவற்றுக்கு எந்தக் கரிசனமும் காட்டாமல் அவற்றின்மீது ஏறி இறங்கி போய்க்கொண்டேயிருந்தது அப்பாதை. சில இடங்களில் பாதையின் வயிற்றைப் பிளந்தபடி மரங்களின் வேர்கள் விரவிக்கிடந்தன. சில இடங்களில் ஜோடியாக வட்ட வடிவ காட்டெருமைக் குளம்புகளின் ரேகைகளில் முந்தாநாள் பெய்த மழையின் மிச்சங்கள் மிதந்தன. பாதையின் இருபக்கங்களிலும் வெகு அருகாமையில் கூடுகட்டியிருந்த ஊசிவால்குருவிகள் அந்த பாதை அரிதாகவே பயன்படுத்தப்படுவதற்கு சாட்சிகளாக இருந்தன.
திடீரென அந்த ஊசிவால்குருவிகள் ஒன்றையொன்று எச்சரித்தபடி கிளைகளிலிருந்து பறந்து வட்டமடித்துவிட்டு மீண்டும் கிளைகளில் அமர்ந்தன. அவற்றின் பறத்தலில் ஏதோவொரு படபடப்பும், அவற்றின் குரலில், ‘ஆபத்து, ஆபத்து’ என்ற எச்சரிக்கையுணர்வும் இருந்தது. இதற்கெல்லாம் காரணமான அவன் இவற்றைக் குறித்து எந்த பிரக்ஞையுமின்றி அவனது போக்கில் நடந்துகொண்டிருந்தான். பின்னாலிருந்து அவனது தோள்களைக் கட்டி முதுகுடன் ஒட்டிக்கொண்டு, தாயின் வயிற்றில் தொங்கும் குரங்குக் குட்டியைப்போல் அவனது பை தொங்கிக்கொண்டிருந்தது. அவனது கால்களில் மிதிபட்டு உடையும் காய்ந்த குச்சிகளும், சருகுகளும் எழுப்பிய சத்ததால் பாதையே விழித்துக்கொண்டதுபோல் உயிரோட்டமான சத்தங்கள் எங்கும் எழுந்தன. பாதையில் கபளீகரம் செய்து இருபுறமும் நிறைந்திருந்த உன்னிமுள் செடிகள், அவனது உடலில் மோதி விலக்கப்பட்டு கோபத்துடன் கத்திசண்டை போடுபவர்களைப்போல் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அவன் கருநீல நிறத்தில் பூப்போட்ட சட்டையும். வெளிர் நீல ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தான், மீசை மெல்லியதாக முளைத்திருக்க தாடி மட்டும் அளவை மீறி முளைத்து சரியாக சிரைத்து காதுகளுக்கு கீழ்வரை கிர்தா நீண்டிருந்தது. தலை முடியை அளவாக வெட்டி சீவியிருந்தான். உதடுகள் கறுத்து தடித்துப்போயிருந்தன. கன்னத்தில் சொல்லிக்கொள்ளும்படியான சதைப்பிடிப்பு ஒன்றும் இல்லை. அதேபோல் உடல்வாகு. நடையில் ஒரு வேகமும் கண்களில் தீர்க்கமும் தெரிந்தது.
“தனியா போவக்கூடாது சாமீ! நரிப்பாறைல யச்சி இருக்கும். அடிச்சுரும். பாலண்ணன் கூடவே இருக்கணும்.”
பல யுகங்கள் கடந்து பழைய அம்மாவின் குரல் எதோ பாதாளத்தில் இருந்து கேட்பதுபோல் கேட்டுக்கொண்டிருந்தது.
யச்சி பெயரை நினைத்தாலே இவனுக்குள் சிலிர்த்துக்கொள்ளும்.
“யச்சின்னா யாரு தெரியுமா? கல்யாணங்கட்டிக்க ஒரு வாரம் இருக்குறப்ப செத்துப்போனாளே ஈஸ்வரி. அவள மாதிரி ஆளுங்கதான் யச்சியாயிரும். உன்ன மாதிரி சின்ன பையன புடிச்சுட்டா விடாதுடா. நம்ம மணி பையன் இருக்கானே! அவன் எப்படி செனைப்பன்னியாட்டம் இருந்தான்? இப்ப சூம்பிப் போயிட்டான். எப்புடி? எல்லாம் யச்சி வேலை.”
பாலன் குரல் காதுகளில் ஒலித்தது.
“பேசாம இருண்ணா. நான் என்ன சின்னப்பையனா?” என்றான். திரும்பிப்பார்த்தால் பாலன் இல்லை.
தூரத்தில் எதோ ஒரு ஆந்தை ‘உக்கும், உக்கும்’ என்று கத்திக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது. இவனிடம்தான் பேசுகிறதோ என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் ‘உக்கும், உக்கும்’. என்னவோ கேட்பதுபோல் இருந்தது. அதற்கு ஏதோ பதில் சொல்ல வேண்டும்போல் இவனுக்கு தோன்றியது. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கேள்வி புரிந்தால்தானே பதில்சொல்வது. ஏதோவொரு புரியாத கேள்வி, அவன் மனதுக்குள் இடைவிடாது அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி, அது இந்த ஆந்தையின் குரலில் கேட்டதாய் தோன்றியது.
‘உக்கும், உக்கும், உக்கும்’
ஆந்தையின் குரல் இதயத்தில் பட்டு எதிரொலித்தது. இதயத்தின் திக்குத்தெரியாத மூலைமுடுக்குகளிலும் பட்டு தெறித்தது. ஆந்தை சட்டென்று திரும்பிப்பார்த்து தலையை வட்டமாக ஆட்டியபடி தனது முட்டைக்கண்களால் முறைப்பதுபோல் தோன்றியது.
‘உக்கும், உக்கும், உக்கும்’
இதயத்தின் சத்தம் வெடிப்பதுபோல் கேட்டது.
‘டொக், டொக், டொக்’
எங்கோ ஒரு மரத்தில் மரங்கொத்திப்பறவை தனது நீண்ட அலகால் கொத்திக்கொண்டிருந்தது. இவனது மண்டையோட்டைக் கொத்தி மூளையை உறிஞ்சிவிட விழைவதுபோல் இவனுக்குத் தோன்றியது.
‘டொக், டொக், டொக்’
‘டொக், டொக், டொக்’
‘டொக், டொக், டொக்’
காட்டின் எல்லா மூலைகளிலும் திடீரென்று முளைத்த மரங்கொத்திகள் மரங்களைக் கொத்திக்கொண்டிருப்பதுபோல் இவனுக்குக் கேட்டது. காதோரத்தில் மின்னல் வெட்டியதுபோல் சிலீரென்று கிளம்பிய வலி அவனது தலை முழுவதும் படர்ந்து நரம்புகளைக் கட்டி இழுத்து மூளையைக் கசக்கிப் பிழிவதுபோல் தோன்றியது. கைகளால் தலையைப் பரபரவென்று தேய்த்துக்கொண்டான். பாதையில் முளைத்திருந்த பாறை ஒன்றில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். பின்னாலிருந்த பையைத் திறந்து, அதனுள்ளிருந்த ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்து அதனுள் அடைக்கப்பட்டிருந்த பச்சை நிற விதைகளை கையில் கொட்டினான். அதை அழுந்தத் தேய்த்து தோலை ஊதிவிட்டு மூக்கின் அருகில் வைத்து காட்டமான வாசனையை நுகர்ந்தான் பின்பு மீண்டும் பைக்குள் கையை விட்டு மூன்றங்குல நீளத்தில் வெள்ளைநிற குழல்போன்ற அமைப்புடைய ஆட்டெலும்பை எடுத்தான். அதில் வாய் சிறுத்த பகுதியைத் தன் கையால் அடைத்துக்கொண்டு இன்னொரு கையிலிருந்த விதைகளைக் கொட்டினான். பின்பு ஒரு சிறு கல்லை எடுத்து எலும்பின் பக்கவாட்டில் சிறிதுநேரம் தட்டினான். அது கொட்டாது என உறுதிசெய்துகொண்ட பிறகு மேலும் கொஞ்சம் வைத்து நன்றாக அடைத்தான், கடைசியில் அதனைப் பற்றவைத்து மெதுவாக புகையை உள்ளிழுக்கத் தொடங்கினான்.
‘உக்கும், உக்கும், உக்கும்’ இதயம் துடிக்கும் சத்தம் உயர்ந்து, மரங்கொத்தியின் சத்தம் தாழ்ந்தது. இதயத்தில் தொடங்கிய மௌனமான அதிர்வு பற்றிப்படர்ந்து கிளம்பி கைகால்களுக்குள் வளர்ந்தது. முகத்தில் பின்னிப்பிணைத்திருந்த நரம்புகள் அனைத்தையும் கழுத்துக்குக்கீழே இழுத்துப்பிடித்து சுண்டியதுபோல் முகம் அதிர்ந்தது. அதிரும் உடலோடு எழுந்து பையை மாட்டிக்கொண்டு நடக்கத்தொடங்கினான். ஒவ்வொரு அடிக்கும் பாதத்தில் கிளப்பிய அதிர்வு வயிறு, நெஞ்சு என படர்ந்து கண்களில் வந்து நின்றது.
“குடிகாரன், பொறுக்கி, கையாலாகாதவன்” யாருடைய குரலோ காதில் ஒலித்தபடி இருந்தது. மண்டைக்குள்ளிருந்து இனம் புரியாத, ஆனால் மிகப்பரிச்சயமான குரல் ஏசிக்கொண்டேயிருந்தது. அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.
“பேசாம இரு”
“மாட்டேன்டா குடிகாரா”
“ஏய். நான் இஞ்சினியர்” கோபமாய்க் கத்தினான். “எங்க ஊரோட ஒரே இஞ்சினியர்” இறுமாப்பும் இளக்காரமும் கலந்த புன்னகையுடன் சொன்னான்.
“குடிகாரன்”
காதுகளைப் பொத்திக்கொண்டான்.
“குடிகாரன், பொறுக்கி, கையாலாகாதவன்”
“குடிகாரன், பொறுக்கி, கையாலாகாதவன்”
கைகளை குரல் வந்த திசையில் வீசி அடிக்க யத்தனித்தான். விரல்களில் சில்லிட்டுக்கிளம்பிய வலி மூளையைத் தட்டியது. புயலடித்ததுபோல் வலியில் குரல்கள் கரைய வனச்சமுத்திரத்தின் ஒற்றைத் தீவாய் நின்றுகொண்டிருந்தான்.
எதிரில் நரிப்பாறை வனத்தின் நடுவில் சேலை விலகிய மார்புபோல் நிர்வாணமாய் நின்றது. அதன் நடுவில் எங்கிருந்தோ கிளம்பிய ஒரு சுனை மெல்லிய கோடு கிழித்ததுபோல் வழிந்துகொண்டிருந்தது.
“வேகமா ஏறுடா தம்பி” பாலன் குரல் கேட்டது. சட்டென்று திரும்பிப்பார்த்தான். பாலன் எதோ ஒரு சிறுவனின் கையைப் பிடித்தபடி மலையின்மீது ஏறிக்கொண்டிருந்தார். அவன் தடுமாறும் இடங்களிலெல்லாம் தூக்கிவிட்டார். அவன் போட்டிருந்த மஞ்சள் நிற பூப்போட்ட சட்டை இவன் நாசிகளுக்குள் இதமான வாசத்தைப் பரப்பியதுபோலிருந்தது. இவனுக்கு அந்த சிறுவனை எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. யோசித்தபடியே பின்னாலேயே இவனும் ஏறிப்போனான். படிக்கட்டுகள்போல் கற்கள் அமைந்திருந்த வழியாக பாறையில் ஏறி அவர்கள் போய்விட இவன் ஏறிப்பார்த்தபோது பாறையின் மேலே யாரும் இல்லை. நரிப்பாறை எப்போதும்போல தன் வெறுமையைத்தாங்கி நின்றது. காற்று சரசரவென்று அடித்தது. பாலனை அவசர அவசரமாய் தன் கண்களால் துழாவினான். பாறையின் மறுபக்கத்தை எட்டிப்பார்த்தான். சில நூறு அடிகள் செங்குத்தாக இறங்கிக்கொண்டிருந்தது. அதற்குமேல் எங்கு தேடுவதென்று புரியாமல், முதுகிலிருந்த பையைப் போட்டுவிட்டு பாறையில் மல்லாக்கப் படுத்தான். நடந்த களைப்பிலும், தலைக்கேறியிருந்த உன்மத்தத்திலும் கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது.


“டேய் தம்பி… எந்திரிடா…” பாலன் எழுப்பினார். சுற்றிலும் பந்தம் எரிந்துகொண்டிருந்தது. இவன் மலங்க மலங்க விழித்தான். பாறையின் மையமான பகுதி என்று கருதக்கூடிய இடத்தில் மூன்று பட்டைக்கற்கள் ஒரு பக்க சுவரில்லாத அறைபோல் நீட்டிக்கொண்டிருந்தது. பக்கவாட்டில் அடுக்கப்பட்ட கற்கள் பின்னால் நீண்டிருந்த மலையின் வயிற்றில் புதைந்ததுபோலிருந்தது. அது பார்ப்பதற்கு பாறையின் மையத்தில் எரியும் தீபத்தை அணையாமல் காப்பாற்ற மலையே இரு கரங்களை நீட்டி வைத்திருப்பதுபோல் தோன்றியது. இவனைச் சுற்றி நான்கைந்துபேர் வெற்றுடம்புடன் நீண்டிருந்தனர். இவனும் அவசர அவசரமாய் சட்டையைக் கழற்றினான். மஞ்சள் நிற பூப்போட்ட சட்டையின் மணம் கைகளில் கமழ்ந்தது. டவுசரையும் கழற்றிப்போட்டு, துண்டை மட்டும் கட்டிக்கொண்டான். நெல்லிக்காய் அளவிலிருந்த கற்பூரத்தை ஏற்றிக்கொண்டிருந்தார். அவரது மீசை கன்னங்களில் அடர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. சிவப்புத்துண்டொன்றை நெற்றிவரை இழுத்து காதுகளின் இருபுறமும் ஏற்றி, அதன் இரு முனைகளை இழுத்து பின்னால் முடிச்சிட்டிருந்தார், துண்டின் இன்னொரு பகுதி கூந்தலைப்போல் முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது. வாயில் சிறிய வாழை இலைத்துண்டைக் கடித்தபடி மூன்று வாழை இலைகளை தரையில் பக்கவாட்டில் வரிசையாக தரையில் விரித்து வைத்து தண்ணீர் தெளித்து நீவிக்கொண்டிருந்தார்.
அங்கே நின்றுகொண்டிருந்த எல்லாருடைய கைகளிலும் வாழை இலையில் சுற்றப்பட்ட படையலும், தூக்குச்சட்டியும் இருந்தது. இவனும் அவசரமாகச் சென்று ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த இவனது படையலையும் தூக்குச் சட்டியையும் எடுத்துக்கொண்டான். ஒவ்வொருவராக சைகை மூலம் அழைத்து படையலை வாங்கி வாழை இலையில் வைத்துக்கொண்டிருந்தார். இவன்முறை வந்தபோது போய் படையலைக் கொடுத்துவிட்டு தூக்குச்சட்டியை வைத்துவிட்டு கற்பூர வெளிச்சத்தில் சாமியைப் பார்த்தான். உள்ளே பெரியதும் சிறியதுமான கன்னங்கரேலென்ற வழவழப்பான உருண்டையான கற்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. அதில் பெரிய கல்தான் கல்குத்தி ராமன், அதைவிட கொஞ்சம் சிறியது ராமாயி. மற்றவையெல்லாம் கருப்பு, யச்சி இன்னபிற. லட்சுமணன் பார்த்துக்கொண்டேயிருக்க பூசாரி கண்ணை உருட்டி “ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…” என்றார். இவன் புரியாமல் விழிக்க பாலன் இவனை நோக்கி, “கும்புட்டுக்க கண்ணு!” என்றார். இவன் அருகில் சென்று மூன்றுமுறை “கல்லுக்குத்தி ராமா… காப்பாத்து ராமா” என்றபடி தொட்டு முத்தமிட்டான்.
“சாமி படியலுல எச்சி சிந்தக்கூடாது கண்ணு. அதுக்குத்தான், பூசாரியண்ணன் வாழையிலையை கடிச்சுருக்கு!” என்று பாலன் இவன் காதில் கிசுகிசுத்தார்.
“ஆமா மசுரு விழக்கூடாதுன்னு மண்டையில துண்டு கட்டியிருக்கான். இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு பூசாரியாவா ஆவப்போறான். பேசாம இருடா” என்று யாரோ பாலனை அதட்டினார்கள்.
படையலை முடித்தபின் தூக்குகளை எடுத்து கொஞ்சம் சாராயத்தினை சாமியின்முன் ஊற்றிவிட்டு அவரவர்களிடம் திரும்பக்குடுத்தார். எல்லாரும் திறந்த தூக்கை கையில் வைத்தபடி பூசாரியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இவனிடம் தூக்கைத் தந்ததும் லேசாக குனிந்து பார்த்தான் தூக்கில் முக்கால்வாசி சாராயம் அப்படியேயிருந்தது. சாமி படையலை வாங்கவில்லையோவென பயந்தான். சாராய நெடி மூக்கை இம்சையாக உறுத்திக்கொண்டேயிருந்தது. பூசை முடிந்ததும் எல்லாரும் படையல் தூக்கைப்பார்த்து முகம் மலர்ந்தனர். படையலுக்கு கொண்டுவந்த தேங்காயை உடைத்து பருப்பை நோண்டிப்போட்டுவிட்டு வெறும் சிரட்டையை மட்டும் எடுத்து எல்லாரும் தயாரானார்கள். லட்சுமணன் மட்டும் சும்மாயிருந்தான். பாலன் அவன் கையில் ஒரு சிரட்டையை திணித்தார். “ம்ம்ஹ்ம்ம் வேணாம் எங்கம்மா திட்டும்” என சிணுங்கினான். “இல்ல சாமி நீ இத குடிச்சாதான் கருப்பு போவவுடும். கண்ண மூடிட்டு கப்புன்னு குடிச்சுடு அண்ணன் பழம் தரேன்” எளறார் பாலன்.
கொஞ்ச நேர சிணுங்கல்கள், கெஞ்சல்கள், அதட்டல்கள் மிரட்டல்களுக்குப்பிறகு லட்சுமணன் சம்மதிக்க வைக்கப்பட்டான். இப்படியாக அவன் முதல் சாராய சடங்கு தொடங்கியது. எல்லார் சிரட்டையிலும் அவரவர் சாராயம் தூக்கிலிருந்து ஊற்றப்பட்டது. லட்சுமணனுக்கு ஏற்கனவே பிடிக்காத வாசம், தான் குடிக்கப்போவதை எண்ணி குமட்டிக்கொண்டு வந்தது. வாய்க்கருகில் கொண்டு சென்றதும் அதன் மூர்க்கமான நெடியில் உடலெல்லாம் சிலிர்த்து உதறியது.
“மூக்க புடுச்சுக்கடா,” என்று பாலன் காதில் சொன்னார். மூக்கைப்பற்றிக்கொண்டு குடித்தாலும் ஏதோவொரு வகையில் வாசம் மூக்கினுள் நுழைந்தது. சுவையற்ற, அல்லது இன்ன சுவையென்று பகுக்க முடியாத சுவையில் வாய்க்குள்ளிருந்த திரவம் தொண்டைக்குள் இறங்குகையில் மணலை முழுங்கியதுபோல் தொண்டையெல்லாம் உறுத்தியது.
“இந்தா, இந்தா பழத்தை சாப்புடு,” என்று அவனது கையில் வாழைப்பழத்தை திணித்தார் பாலன். வாழைப்பழம் தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு போனது இதமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் இதயத்துடிப்பு, விண் விண்ணென்று மண்டைக்குள் இடிப்பதுபோல் இருந்தது. ஒவ்வொரு துடிப்பிற்கும் காட்சி அதிர்ந்தது. கீழே உட்கார முயன்றபோது கால் நழுவி தொப்பென்று விழுந்தான். ஆனால் பெரியதாக வலிக்கவில்லை. சுற்றிலும் எல்லாரும் குடித்துக்கொண்டிருக்க மெதுவாக இவன் படுத்தான். வானில் நட்சத்திரங்கலெல்லாம் விழுவதுபோலவேயிருந்தது.


நட்சத்திரங்கள் சிமிட்டியபோதுதான் இவன் கண்ணை விழித்தான். பக்கத்தில் எலும்புக்குழல் காற்றுக்கு உருண்டுகொண்டிருந்தது. கஞ்சாவின் போதை தெளிந்தபாடில்லை. கைகளில் ரத்தம் வேகமாகப் பாய்வதுபோன்ற உணர்வில் நடுங்கிக்கொண்டிருந்தன. கையை பைக்குள் விட்டு பாதி வெட்டப்பட்ட ஸ்ப்ரைட் பாட்டிலை எடுத்தான், அதற்குள்ளிருந்த மட்டை ஊறுகாய் பாக்கட்டுகளை வெளியே போட்டு ஒன்றை மட்டும் பிரித்து வைத்துக்கொண்டான். ஒரு விரலால் தொட்டு நாக்கில் தடவிக்கொண்டு சப்புக்கொட்டினான். அந்த உப்புச்சுவையை நாக்கில் பரவவிட்டபடி டம்ளராக்கப்பட்ட ஸ்ப்ரைட் பாட்டிலை தொடையிடுக்கில் சொருகிக்கொண்டு ரப்பர் ட்யூபை அவிழ்த்தான். அதிலிருந்து கிளம்பிய சாராய நெடியை மூக்கில் வைத்து உறிஞ்சி அனுபவித்தான். பின்பு அப்படியே சாய்த்து டம்ளரில் ஊற்றினான். மீதி சாராயம் கொட்டாதவாறு மீண்டும் ரப்பர் ட்யூபை மடித்து அதன்மீது பெரிய கல்லை வைத்தான்.


கொஞ்சம் கொஞ்சமாக ரசித்தபடி குடிக்கத்தொடங்கினான். நடுவில் குழலை நிரப்பி கஞ்சாவை புகைக்கத்தொடங்கினான். சாராயத்தின் நெடி வாய்க்குள் இம்சையாகும்போது ஊறுகாயிலிருந்த எலுமிச்சைத்துண்டைக் கடித்துக்கொள்வான். அந்த பெரிய டம்ளரில் இரண்டு டம்ளர் குடித்து முடித்த நேரத்தில் கொஞ்சம் இடைவெளியெடுத்துக்கொண்டான். வானைப்பார்த்தபடி படுத்தான். கண்களில் கண்ணீர் வழிந்து ஓடி பாறையை நனைத்தது.


“அவ்வூஊஊஊஊ…” தூரத்தில் ஊளை கேட்டது. “வந்துட்டாளா…” என்று சலித்தபடி மறுபடி கஞ்சாவை ரொப்பிக்கொண்டான். பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு அருகில் வைத்து உருண்டு போய்விடாவண்ணம் சிறு கல்லால் முட்டுக்கொடுத்துவிட்டு ட்யூபை எடுத்து அடுத்த டம்ளர் சாராயத்தை ஊற்றினான்.


தூரத்தில் வானிலிருந்து நட்சத்திரம் ரெண்டு ஜோடியாக விழுந்தது. லட்சுமணன் பாரத்துக்கொண்டேயிருக்க அப்படியே விழுந்து புதர்களுக்கு அடியில் மறைந்துபோனது. ஒரு நொடிதான், விழுந்த நட்சத்திரங்கள் மீண்டும் எழுந்தன. ஆனால் முன்புபோல் அவை வானுக்கு ஏறிவிடவில்லை. புதர்களுக்கு நடுவில் நிலையாக நின்றன. ஒரு நிமிடம் லட்சுமணன் டம்ளரை கையில் பிடித்து ஆச்சர்யத்தில் மூழ்கியபடி பார்த்தான். பின்பு அவை நட்சத்திரங்களல்ல, அதையொத்த, நிலவொளியில் ஜொலிக்கும் இரு கண்கள் என அறிந்து ஆசுவாசமாகி டம்ளரிலிருந்தவற்றை குடிக்கத் தொடங்கினான். ஆனால் அந்தக் கண்களிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் இவன் கண்கள் கட்டுண்டு கிடந்தது. குறிஞ்சியின் கண்களில் கட்டுண்டதுபோல.


இவனது நினைவுகளில் கலைந்துபோன மேகங்களினூடே கலங்களாய்த் தெரியும் வானத்திட்டுக்களைப்போல் நினைவுகளில் ஆழப்பரப்புகளில் சிதறிக்கிடந்த நினைவுகள் திட்டுத்திட்டாயத் தென்பட்டன. அப்போது இவன் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான். அரசு பேருந்தில் டிரைவரும் கண்டக்டரும் காசு போட்டு சிடி பிளேயர் வாங்கி வைத்த காலம், ஏற்காட்டுக்கு போய்தான் பள்ளி படிக்க வேண்டும் என்ற நிலைமையில் இருந்த அத்தனை கிராம மாணவர்களும் ஒரே பேருந்தில் போய், ஒரே பேருந்தில் திரும்பிய காலம். பேருந்தில் இரண்டுபேர் சீட்டில் மூன்று பேரும், மூன்று பேர் சீட்டில் நான்குபேரும் சீட்டின் இடைவெளியில் கம்பியைப் பிடித்தபடி ஒன்றிரண்டுபேரும் நின்று இன்ஜின் பெட்டியின்மீது உட்கார்ந்து ரியர்வியூ மிரரை மறைக்கதவாறு முன்னால் கண்ணாடியிடம் அமர்ந்து மீதி நிற்பவர்கள் நரம்பு பையில் அடுக்கப்பட்ட புத்தகங்களை காலிடுக்கில் வைத்துக்கொண்டு இருக்கும் நெருக்கத்தில் தேவையே இல்லையென்றாலும் கம்பிகளுக்குள் கைநீட்டி பிடித்துக்கொண்டு அப்போதும் நண்பர்கள் தேடி கதைகள் பேசிக்கொண்டு, சிடி ப்ளேயரில் ஒலிக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு ஒரு மணி நேர பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் குறைய இறுக்கம் தளர்ந்து, தளர்ந்துபோய் கொட்டச்சேடு வந்து சேர்ந்த பயண காலத்தில் அவன் குறிஞ்சியை சந்தித்தான்.


அது என்றும்போல சாதாரணமான பயணமாகத்தான் இருந்திருக்கும். மதிய சத்துணவு முட்டை பெற்றதைத்தவிர அந்த வியாழக்கிழமை எந்த விதத்திலும் முக்கியத்துவம் பெறவில்லை. அதே நேரம், அதே பேருந்து, அதே சீருடை, அதே கணக்குக்காய் தாரைவார்க்கப்பட்ட பீட்டி வகுப்பு, அதே கடைசி சமூகவியல் பாடம், அதே ஓட்டம், அதே வேடிக்கை, மாலையும் அதே பேருந்து என அத்தனையும் அதே… அதே… அதே… அன்றிருந்த கூட்டத்தில் பஸ்ஸில் நெருக்கி ஏறி மூன்றாவது சீட்டின் அருகில் நின்றிருந்தான். ஆறாவது சீட்டில் சேவராய்ஸ் ஹோட்டலில் காஃபி போர்ட் மீட்டிங் முடித்துவிட்டு, ஒண்டிக்கடையில் ஏறி சீட் பிடித்திருந்த பாலன் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் இவனுக்குள் மகிழ்ச்சி பிறந்தது. அவரிடம் பையைக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக நின்றுகொண்டு வரலாம். பையைத் தூக்கி, “ஏய் மகா. இந்த பைய பாலண்ணன்கிட்ட குடு” என்று தூக்கி நீட்டினான். தூக்கிய நேரம்பார்த்து பஸ் ஒருபக்கமாக சாய்ந்து மான்போர்ட் சறுக்கத்தில் இறங்க பையை கிட்டத்தட்ட மகாவின் தோளில் வைத்தான். எரிச்சலாக உச்சுக்கொட்டியபடி மகாலட்சுமி திரும்பும்போதுதான் கவனித்தான், அது அவளில்லை. இவனுக்கு பக்கென்றது. இதயம் வேகமாகத் துடித்து ரத்தம் கிளம்பி முகத்தில் ஏறி மண்டையில் அறைந்தது. நல்லவேளையாக அவளை தள்ளிக்கொண்டு மகா கையை நீட்டி “குட்றா லச்சுமா…” என்று வாங்கினாள். அவளிடம் மன்னிப்பு கேட்பதற்குள் அவள் விருட்டென்று திரும்பிக்கொள்ள, இவன் அவள் திரும்பிப் பார்ப்பாளா என்று பார்த்துக்கொண்டே வந்தான். வாழவந்தியில் அவள் இறங்கும்போது குனிந்து பையை எடுத்துக்கொண்டு இவனை ஒரு நுண்நொடி பார்த்தாள். அந்த கணம் இவனைப் பிய்த்தெடுத்து வேறொரு உலகில் நட்டது.


எல்லா ஆணுக்குள்ளும் ஒரு தகப்பன் ஒளிந்திருக்கிறான். பிறக்கும்போதே அவன் அப்படியே பிறக்கிறான். தன்னோடு வளரும் பெண்களை அவன் வளர்ந்ததாகவே மதிப்பதில்லை. எப்போதும் அவர்களின் சிறுவயது சேட்டைகள், மூக்கொழுக விளையாடியது, ஓட்டைப்பல்லோடு சிரித்தது, பாவாடை விரித்து சிறுநீர் கழித்தது, எண்ணை காணாது காய்ந்த முடியில் ரெட்டை சடையோடு திரிந்தது, ஓட்டைப்பாவாடையில் குண்டி தெரிய ஓடியதெல்லாம்தான் நினைவுக்கு வருகிறது, அவள் எவ்வளவு பேரழகியானாலும் அவனுக்கு இவையெல்லாம் நினைவுக்கு வந்து அவள் மீது ஈர்ப்பு பிறப்பதில்லை, மாறாக அவள் குழந்தைமையே நினைவுவருகிறது. அவ்வாறு ஈர்ப்பு ஏற்பட ஒன்று அவன் சிறிதுகாலம் பிரிந்திருந்தது பார்க்க வேண்டும், அவன் அறியா சிறு பிராயங்கள் கொண்ட பெண்ணைப் பார்க்க வேண்டும். அப்படி இவனுக்கு தெரியாத பெண்கள் அந்த பேருந்திலேயே இல்லை. ஈஸ்வரியின் தெற்றுப்பல்லும், மகாலட்சுமியின் ரெட்டை ஜடையும், வெள்ளச்சியின் பெரிய மார்பும் அவனுக்கு எந்த ஈர்ப்பையும் வழங்கிவிடவில்லை. ஆனால் வாழவந்தியில் எட்டாவதுவரை படித்து ஒன்பதாவதுக்கு ஏற்காடு வந்திருந்த குறிஞ்சியின் கண்கள் அவனை ஈர்த்தன. மேலே சொன்ன பெண்களோடு நிற்கவைத்தால் அவள் ஒரு பொருட்டேயில்லை என்று நமக்கு தோன்றினாலும் இவனுக்கு அவர்களுக்கு நடுவிலேயே நின்ற குறிஞ்சி பேரழகியாய்த் தெரிந்தாள்.


காதலென்னும் கண்ணுக்குத் தெரியாத காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு செல்லும் சிற்றிலையின் இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான் இவன். அடுத்தநாள் காலை முகத்தில் பவுடர் தூக்கலாக போட்டு பேருந்தில் இரண்டுபேர் சீட்டில் இடம் பிடித்து, வாழவந்தியில் அவள் ஏறும்வரை படபடப்பாக பார்த்துக்கொண்டிருந்தான். முந்தைய நாள் அறிமுகத்தில் இவனைக்கண்டு லேசாக புன்னகைத்தாள். இவனுக்குள் ஜிவ்வென்றிருந்தது. அருகில் நின்றவளிடம் “பைய குடுங்…” என்று இவன் காதிலேயே விழும் வண்ணம் சொல்ல அவளுக்கு என்ன புரிந்ததோ பையை இவனிடம் நீட்டினாள். இவன் தனது பையை மடியிலிருந்து கீழே வைத்துவிட்டு அவளுடையதை மடியில் வைத்துக்கொண்டான். அவளையே மடியில் வைத்ததுபோல் இருந்தது. அவள் கை பிடித்த கைப்பிடியை தடவிப் பார்த்தான். அவள் விரலின் ரேகைகள் ஒட்டிக்கொண்டதுபோல இருந்தது. பஸ்ஸில் ‘என்னவளே அடி என்னவளே’ பாடல் ஒலித்தது இவனுக்காகவே ஒலித்ததுபோல் இருந்தது. அவள் அருகிலேயே நின்றாள், அவளை இவன் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்துக்கொண்டிருப்பதென்றால் கண்களால் மட்டுமல்ல. அவள் குரலை, காற்றில் மிதந்துவந்த அவள் உடலின் வெப்பத்தை, இவன் பேண்டோடு உரசிய அவள் சுடிதாரை, இன்னும் சூன்யங்களால் நிரப்ப முடியாத எத்தனையோ வகையில் புலன்களெல்லாம் கண்ணாக அவளை ரசித்துக்கொண்டேயிருந்தான்.


இவனைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்கள்போல் வீணான நாட்கள் வேறெதுவும் இல்லை. சனி ஞாயிறுகளில் விளையாட்டன்றி வேறெதுவும் இல்லாத காலத்தில் இவை எதிலும் ஆர்வமின்றி கழிந்த வாரம் அது. இவன் வைக்கோல் குடிசை கிழித்துக் கிளம்பும் ஒளியிலும், கண்ணாடியிலும், பாதை மரங்களிலும், தண்ணி சேந்தும் வாளியிலும் எல்லாம், எங்கும் அவள், அவள், அவள். இரவின் கனவை ஆளும் யச்சியும் அவளானாள். அந்த நாளில் எதோ இனம் புரியாத பாரமொன்று இதயத்தின் மேல் ஏறி அமர்ந்ததாய், அல்லது அவளையே அப்படியே தூக்கி இதயத்தில் அமர்த்தி வைத்ததாய் நினைத்துக்கொண்டான். மறுபடி திங்கள் அவளைக் கண்டதும்தான் இவனுக்கு நிம்மதி பிறந்தது. ரொம்ப நாட்கள் காத்திருக்கவில்லை, ஒரு மாதத்தில் காதலை சொல்லிவிட்டான் அவளிடம். காதல் கடிதம் என்று ஒன்றும் எழுதிவிட தெரியவில்லை என்றாலும், சிறிய பேப்பரில் எழுதிய “ஐ லவ் யூ” போதுமானதாக இருந்தது இவனுக்கு. அவள் அந்த கடிதத்தைப் பார்த்து பயந்தாள். இவன் பக்கம் திரும்பாமலே இருந்தாள், பயம் மாறாத கண்களோடு. அவள் ஒன்றும் சொல்லவில்லையென்றாலும் இவன் சும்மாயிருக்கவில்லை. அம்மாவிடம் பள்ளிக்கட்டணம் என்று முதல்முதலாக பொய் சொல்லி வாங்கிய இருபது ரூபாய் கழுத்து டாலரை அவள் பார்க்குமாறு பையில் போட்டிருந்தான். அவள் அடுத்தநாள் அதை அணிந்து வந்ததில் சம்மதம் என்று உணர்ந்திருந்தான். அவர்கள் காதலில் பை பரிமாற்றமும், பார்வை பரிமாற்றமுமன்றி வேறேதும் நடக்கவில்லை. ரெண்டு மாதம் கழித்து ஒரேயொருநாள் கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல், அருகில் நின்று அவள் கைவிரல்களை கோர்த்துக்கொண்டான். இவன் காதலை நண்பர்களான சத்யாவும், பாக்கியராஜும், மாதையனும் அறிந்தேயிருந்தனர். அவள் தோழிகள் அறிந்தனராயென்று இவனுக்கு தெரியாது.


தொடங்கிய வேகத்தில் இவனது காதல் முடிந்து போகும் என்பதும் இவனுக்குத் தெரியாது.


“டேய் லட்சுமா?” என்றார் பாலன். கையில் கிரிக்கெட் பேட்டுடன் சென்றுகொண்டிருந்த லட்சுமணன் நின்றான்.


“என்னடா, வூட்டுப் பக்கமே வர்றதில்லை. அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கூச்சப்படாதடா, எப்பயும் போல வந்துட்டு இரு. நான் இல்லைன்னாலும் அண்ணிக்கிட்ட காபி போட்டு தர சொல்லி குடுச்சுட்டு போ.” என்றார்.


“சரிண்ணா!” என்று சொல்லி வைத்தாலும் அவன் பாலன் வீட்டுக்குப் போவதேயில்லை. அவரும் ‘என்னவோ கூச்சப்படுறான்’ என்று விட்டுவிட்டார். அவன் போகாத காரணம் தெரிந்த அவனது நண்பர்கள், சத்யா, பாக்கியராஜ், மாதையனும் அவனிடம் அது குறித்து அதிகமாய் பேசுவதில்லை. ஒரு சில விஷயங்களை பேசாமல் விடுவதே சிறந்தது என அவர்கள் நினைத்திருக்கலாம், இல்லையென்றால் என்ன பேசுவது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இப்படி என்னவென்று தெரியாத ஏதோவொரு காரணத்தால் பேசப்படாமல் போனது அந்த கதை.


“டேய் லட்சுமா!” ஒரு நாள் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு பேட்டைப் பிடித்தபடி அழைத்தார் பாலன். “நீ வூட்டுக்குப் போயி, அண்ணிகிட்ட சொல்லி, பிரவுன் கலரு பேண்டு பேக்கட்டுல ஒரு பாக்கெட்டு கோல்டு பில்டர் இருக்கு, எடுத்துட்டு வா!” என்றார்.
“ண்ணா, நான் பேட்டிங் புடிக்கணும், கண்ணன போவ சொல்லு.” என்றான் லட்சுமணன்.
“டேய், அவன் சின்னப்பையன். நீ போயிட்டு வா, நான் அவுட் ஆவ மாட்டேன்,” என்று அனுப்பி வைத்தார்.
அவனது கால்கள் முதன்முதலில் நடுங்கத்தொடங்கின. ரெண்டுங்கெட்டான் வயதில் ராத்திரி காட்டுக்குப் போகும்போது யட்சி பின்னாலேயே வருவதாய் எண்ணி நடுங்கியபடி நடந்ததுபோலவே உணர்ந்தான். உதடுகள் அவனையறியாமல் ‘யச்சி, யச்சி’ என்று முணுமுணுத்தன. உதடுகள் ஒட்டிக்கொண்டன. தலை சுற்றுவதுபோல் இருந்தது. எதோ இதுவரை போகாத புதிய ஊருக்குள் நுழைபவன்போல் பாலனின் வீட்டை நோக்கிச் சென்றான். இவனை தூரத்தில் பார்த்ததுமே, பாலன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த குறிஞ்சி எழுந்து உள்ளே போனதைப் பார்த்ததும் அவனது தயக்கம் இன்னும் கூடியது. இன்று மட்டுமல்ல, கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை பாலண்ணன் வீட்டுக்குப் பக்கத்தில் இவன் போகும்போதெல்லாம் வாசலில் அமர்ந்திருக்கும் குறிஞ்சி எழுந்து உள்ளே போய்விடுவாள். அது தெரிந்தாலும் இவன் கண்டுகொள்ளாமல் கடந்து போவான். ஆனால் இன்று அவள் வீட்டிற்கே செல்ல வேண்டியிருப்பதால் அவனுக்கு உடலெல்லாம் எதுவோ ஒன்று ஊர்வதை போல் இருந்தது.


“என்னங்,” என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்வதுபோல் வாசலில் இருந்து கூப்பிட்டான். உள்ளே தயக்கத்துடன் கொலுசு சத்தம் கேட்டது.
மீண்டும், கொஞ்சம் சத்தமாக, “என்னங்,” என்றான்.
இந்த முறை தயக்கமின்றி உள்ளேயிருந்து கொலுசுச் சத்தம் எட்டிப்பார்த்தது. நீலவண்ணத்தில் ஏதோவொரு இலையில் படம்போட்ட சேலையுடன், தலையில் கொண்டையுடன், மஞ்சள் பூசிய குறிஞ்சி வந்தாள். லட்சுமணன் ஒரு நொடி பார்த்தான், ‘இல்ல, இது குறிஞ்சியே இல்ல’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அடுத்த நொடி அவளது பெரிய கண்கள், ‘என்ன?’ என்பதுபோல் அவனைக் குடைந்த அவளது கண்கள், அவை அதே கண்கள்தான். அதே குறிஞ்சியின் கண்கள்.
“யச்சி!”
“யச்சி!”
“யச்சி!”
அவனுக்கு மட்டுமே கேட்கும் ஒரு குரல், அவனது இதயத்தின் மூளை முடுக்குகளெல்லாம் பட்டு எதிரொலித்தது. அந்த வீட்டின் கூரையில் வேயப்பட்டிருந்த நெருக்கமான வைக்கோல்களின் மத்தியில் தப்பி வந்த எதோ ஒரு வெளிச்சக்கதிர் அவளது கழுத்துக்குக்கீழே நெஞ்செலும்பில் விழுந்து நின்றது. தனது மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட நாவினைப் பிரித்தெடுக்க லட்சுமணன் பெரும்பாடு பட்டான்.


பிளாஸ்டிக் பாட்டில் பாறையில் உருண்டபடியிருந்தது. இவனது முகத்தில் சில்லென்ற காற்று அறைந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டு பையைத் தடவி சிகரெட் பாக்கட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டான். தூரத்தில் தனது பிரம்மாண்ட கிளைகளை நீட்டி நிலவை எட்டிப் பிடிப்பதுபோல் இரவின் பயங்கரத்தைக் கூட்டியபடி நின்ற புளியமரத்தின் கிளையொன்றில் எதோ ஒரு உருவம் தொங்கியபடியிருந்தது. இவன் தனது கண்களைச் சுருக்கியபடி தடுமாறி எழுந்து அதை நோக்கி நடந்தான். அவனது இதயம் படபடவென்று துடித்து உடலெங்கும் இனம் புரியாத நடுக்கம் படர்ந்தது. கால்களுக்குள் நடுக்கம் பரவி ஒன்றோடொன்று பின்னிக்கொண்டன.
“அய்யய்யோ… பாலண்ணா!” மாதையனின் குரல் இவன் கழுத்துக்குப் பின்னால் கேட்டது. தடதடக்கும் காலடி ஓசைகள் இவனுக்குப் பின்னால் கேட்டன. இவனைத்தாண்டி வேகமாக ஓடிய பாக்கியராஜ் மரத்தில் ஏறி கயிறை அவிழ்க்க கீழேயிருந்து நான்கைந்துபேர் பிடித்துக்கொண்டனர். யார் யாரோ அழும் குரல் கேட்டது. இவன் முன்னால்போக யத்தனித்தான், கால்கள் பின்னிக்கொண்டு நடக்க முடியவில்லை. இவனது கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. அவனை அழவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல் கொஞ்ச நேரம் காற்று அமைதியாக இருந்தது.
எல்லாரும் முன்னால் போய்க்கொண்டிருக்க இவன் பின்னால் திரும்பி நடந்தான். தூரத்தில் ஏதோவொரு குடிசையின் வாசலில் கூட்டமாக பெண்கள் தலைவிரிகோலமாய் அழுதபடியிருந்தனர். இவன் மெதுவாக நடந்து அவர்கள் அருகில் சென்றான். நடக்க நடக்க இவனுக்குள் இனம்புரியாத பயம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அவர்களுக்கு மத்தியில் எதோ ஒரு பெண்ணின் பிணம் படுக்க வைக்கப்பட்டிருந்தது. இவனுக்கு நன்றாகத் தெரிந்த உருவம் போல் இருந்தது. ஆனால் எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரவில்லை.
தூரத்தில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது.
“யச்சி,” இவனது உதடுகள் முணுமுணுத்தன.
சிரிப்பொலி இன்னும் அதிகமாய்க் கேட்டது.
தன்னையறியாமல் இவனும் சிரித்தான்.
“ஹாஹாஹா…” உடல் அதிர சிரித்தான், சிரிப்பு அவனிடமிருந்து கிளம்பி மலையெங்கும் வியாபித்துப் பரவியது.
சிரிப்பு…
சிரிப்பு…
சிரிப்பு…
ரத்தம் உறையவைக்கும் இடிச்சிரிப்பு அவனிடமிருந்து கிளம்பியது. அவன் நெஞ்சுக்கூட்டிலிருந்த காற்றையெல்லாம் சிரித்துத் தீர்க்கப்போகிறவன்போல சிரித்தான். சிரிப்பில் உடல் துள்ளி எழுந்து அமர்ந்து சிரித்தான். அவனுக்குள் இருந்த எரிமலை வெடித்துக்கிளம்பியதுபோலொரு சிரிப்பு. அந்த சிரிப்பில் பறவைகள் விலங்குகள், ஏன் அருகிலிருந்த கல்குத்திராமன் கூட அசைந்து பார்த்திருப்பான்.
திடீரென்று தூரத்தில் குறிஞ்சியின் முகம் தெரிந்தது. சுற்றியிருந்த எல்லாம் மறைந்துபோய் அவள் முகம் மட்டும் நிலவொளியில் ஒளிர்ந்தது. இவனது கண்கள் அகல விரிந்தன. கால்கள் கட்டுப்பாடின்றி அவளை நோக்கி நகர்ந்தன. சிரித்தபடி அவள் ஓடிக்கொண்டிருந்தாள். இவனும் வேகமாய் அவளை நோக்கி ஓடினான். இவனைத் திரும்பிப் பார்த்தபடி அவள் குதித்து ஓடினாள். இவனும் சிரித்தபடி ஓடினான். திடீரென்று மேலெழும்பி பறந்தாள். இவனும் தாவிக்குதித்துப் பறந்தான். அவள் இவனை நோக்கி கைகளை நீட்ட, அவளது கையைப் பிடிக்க இவனும் கையை நீட்டியபடி பறந்துகொண்டேயிருந்தான்.
புதர்களுக்கு நடுவில் ஜொலித்துக்கொண்டிருந்த கண்கள் மெல்ல நரிப்பாறையை விட்டு இறங்கிப் போயின.


Comments

Leave a comment