ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடும் ஒரு சாதாரண ஹைஸ்கூல் கெமிஸ்ட்ரி வாத்தியாரின் கதை டிவி சீரியஸ்களில் பல ரெக்கார்டுகளை உடைத்துத் தள்ளும் என்று யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. மிக சாதாரணமாகவே கதை ஆரம்பிக்கிறது. ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடும் வால்டர் ஒயிட்டின் வாழ்வு மிக சாதாரணமானது. அந்த சாதாரணமான தன்மைதான் பிரேக்கிங் பேடின் சிறப்பு. பள்ளி படித்துக்கொண்டிருக்கும் அவரது மகனான வால்டர் ஒயிட் ஜூனியர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவன். வால்டர் ஒயிட்டின் மனைவி ஸ்கைலரும் கர்ப்பமாக இருக்கிறாள். அவனுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஸ்கைலரின் தங்கை மேரியும் அவளது கணவன் ஹேங்க்கும் மட்டுமே இருக்கின்றனர். இதில் ஹேங்க் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றுகிறான். சொல்லப்போனால் அந்த குடும்பத்திலேயே ரொம்ப சாதாரண வாழ்க்கை வால்டர் ஒயிட்டுடையது.
இந்த நேரத்தில் சில உடல் உபாதைகளால் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியிருந்த வால்டருக்கு புற்று நோய் இருப்பதாக மருத்துவர் தெரிவிக்கிறார். கீமோதெரபி எனும் கதிர்வீச்சு மூலமே அவரது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அதிலும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஐம்பது சதவீதம்தான் என்றும் அதிர்ச்சியான தகவலை டாக்டர் தெரிவிக்கிறார். வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கும் மனைவி, சில மாதங்களில் பிறக்கவிருக்கும் குழந்தை. மாற்றுத்திறனாளி மகன் என்றிருக்கும் சூழ்நிலையில் பெரிய அளவில் சேமிப்பெல்லாம் இல்லாத வால்டர் மட்டுமே வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர். இந்த சூழ்நிலையில் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி வால்டருக்கு கவலை எழுகிறது.
இந்த சூழலில் தனது சகலை ஹேங்க் ஒரு போதைக்கும்பலை கைது செய்ய செல்கையில் வேடிக்கை பார்க்கப் போன வால்டர் கண்ணில், அங்கிருந்து தப்பி ஓடும் அவனது பழைய மாணவன் ஜெஸ்ஸி பிங்க்மேன் படுகிறான். போலீசுக்குத் தெரியாமல் அவனைப் பிடிக்கும் வால்டர் அவன் ஒரு ட்ரக் டீலராக இருப்பதைத் தெரிந்துகொள்கிறான். சட்டத்துக்கு பயந்து இத்தனை வருடங்களாக வாழ்ந்து வந்த வால்டர் தனது குடும்பத்தை எண்ணி முதன்முறை சட்டத்தை மீற முடிவு செய்கிறான். ஜெஸ்ஸியை மிரட்டி மெதிலம்பெத்தமன் அல்லது மெத் என்ற போதைப்பொருளை தானே தயாரித்துக்கொடுத்து அதை விற்றுக்கொடுக்க சொல்கிறான். அதற்காக அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு சென்று இருவரும் மெத் தயாரிக்கிறார்கள். தனது குடும்பத்தை கரைசேர்க்க முதன்முதலில் வால்டர் ஒயிட்டின் தேவை 737000 டாலர்கள். அது எங்கே சென்று முடிந்தது என்பதுதான் பிரேக்கிங் பேட்டின் கதை.
பொதுவாக ட்ரக்ஸ், கார்டெல் போன்ற கதைகளில் பெரும்பாலும் துப்பாக்கி சண்டை, போலீசின் சேஸிங் போன்றவையெல்லாம் அதிகம் இருக்கும். ஆனால் இங்கே அது இல்லை. அதேபோல் ரசிகர்களை கவர, நிர்வாணக் காட்சிகளும் படுக்கையறைக் காட்சிகளும் நிறைய இருக்கும். அதுபோக கார்டெல் என்றாலே இருட்டான க்ளப்பில் எந்நேரமும் இரண்டு பெண்களுடன் கூத்தடித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கே அதுபோன்ற காட்சிகள் எதுவும் இல்லை. மிக எளிமையான ஒரு குடும்ப டிராமாவாகவே இருக்கிறது. இப்படி சாதாரண கதை எப்படி IMDBயின் முதல் ரேட்டிங்கைப் பிடித்தது? சண்டை சேஸிங் என்று எதுவுமேயில்லாமல் எப்படி பரபரப்பான திரைக்கதையை அமைத்தார்கள்? அங்கேதான் இருக்கிறது டாம் அண்ட் ஜெர்ரி சூத்திரம்.
வால்டரின் மெத்தை விற்க செய்யும் முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிவது மட்டுமன்றி ஏற்கனவே ட்ரக் டீலர்களாக இருக்கும் ரவுடிகளின் எதிர்ப்பை வேறு சம்பாதிக்கிறது. போதாக்குறைக்கு ட்ரக் பிஸினஸில் இருக்கும் ஸ்பானிஷ் குடும்பங்கள் ஹெய்சன்பெர்க் என்ற புனைப்பெயரோடு வால்டரைத் தேடுகின்றன. இன்னொரு புறம் கெமிஸ்ட்ரி வாத்தியாரான வால்டரின் மெத் 99 சதவீதம் சுத்தமான சரக்காக இருப்பதால் அதற்கு டிமாண்ட் கூடுகிறது. அதனால் உள்ளூர் கார்டெல்லால் அதிக மெத் தயாரித்துக் கொடுக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறான். போதைத்தடுப்புப் பிரிவு அதிகாரியான ஹேங்க் மற்றும் குழுவினருக்கு இந்த புதிய போதைப்பொருளும், ஹெய்சன்பெர்க் என்ற பெயரும் தெரியவர அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இப்படி போலீஸின் மூக்குக்குக் கீழே ஒளிந்தபடி ட்ரக் மாஃபியாவாக வளரும் வால்டரின் கதை என்பதுதான் இங்கே சுவாரசியம்.
பிரேக்கிங் பேட் என்றாலே லாயராக வரும் சால் குட்மேனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. போலீஸை டீல் செய்யும் அனாயாசமான உடல் மொழி. பிரச்சினைகளில் பயப்படும் நடுக்கம். “I know a guy who knows a guy who knows the guy” என்று இல்லீகல் விஷயங்களுக்கு தீர்வு சொல்வது, பேசி முடித்ததும் போனை உடைத்து எறிவது என்று எல்லாவற்றிலும் கலக்கி இருப்பார். இணையத்தில் சால் குட்மேன் மீம்ஸ்கள் மிகப் பிரபலம். சாதாரண வக்கீலான ஜிம்மி, சால் குட்மேனாக வளர்ந்த கதை பிரேக்கிங் பேடுக்கு முந்தைய கதையாக மீண்டும் “Better call Saul” என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதிலிருந்து அந்த கேரக்டரின் ரீச்சை புரிந்துகொள்ளலாம். அதுபோக பிரச்சினைகளை துப்பாக்கியால் டீல் செய்ய ரிடையர் ஆன போலீஸ் மைக், ஒரே ஒரு கை விரலைத் தவிர ஒன்றுமே வேலை செய்யாத ஹெக்டர் சாலமன்க்கா, டையின் நெருக்கம்கூட குறையாமல் பக்கா ஜென்டில்மேனாக தனது ஹோட்டலை நடத்திக்கொண்டிருக்கும் ட்ரக் கார்டெலான கஸ் பிரிங் என எல்லோரும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார்கள்.
இவையெல்லாம் விட பிரேக்கிங் பேடின் பலமே அதன் வசனங்கள்தான்.
“Some straight like you, giant stick up his ass, age what, 60? He’s just gonna break bad?”
“You don’t need a criminal lawyer. You need a ‘criminal’ lawyer.”
“What good is being an outlaw when you have responsibilities?”
“So you do have a plan! Yeah Mr. White! Yeah Science!”
“I did it for me. I liked it. I was good at it. And I was really — I was alive.”
” I am not in danger, Skyler. I am the danger.”
“A guy opens his door and gets shot, and you think that of me? No! I am the one who knocks!”
இவை மிகக் குறைவான சாம்பிள்கள்.
“What does a man do Walter? A man provides for his family. And he does it even when he is not appreciated, or respected, or even loved” என்ற கஸ் பிரிங்கின் வசனம்தான் மொத்தமாக பிரேக்கிங் பேடின் உயிர்நாடி. வால்டர் செய்யும் எல்லா குற்றங்களையும் மன்னித்து பார்வையாளர்களை வால்டரோடு ஒன்றச் செய்யும் சூத்திரம் இதுதான். வால்டரின் இன்னொரு முகத்தைத் தெரிந்த பிறகும். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவனோடு வாழ்ந்தாலும் சிறு குற்றத்துக்காக ஸ்கைலரை மிகக் கொடூரமானவள்போல் பார்வையாளர்கள் முன்பு நிறுத்துவதும் இதுவேதான்.
பல வருடங்களாக டிவி சீரிஸ்களிலும் படங்களிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த பிரையன் கிராஸ்டனுக்கு பிரேக்கிங் பேட் உண்மையில் ஒரு பிரேக்தான். அவருக்கு மட்டுமல்ல அதில் நடித்த பலருக்கும் இதுவே அடையாளம். முன்னணி நடிகர்கள் இல்லை, பெரிய சண்டைக்காட்சிகள் இல்லை, நிர்வாண காட்சிகள் இல்லை, திரைக்கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட பிரேக்கிங் பேட் திரைக்கதை எழுதும் பலருக்கும் பாலபாடம். நடித்த நடிகர்கள் அத்தனைபேரும் சிறிய பிசிறுகூட இல்லாமல் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையானதை மட்டும் நடித்திருப்பார்கள். Scarface (நம்ம பில்லா 2வை 1983ல் காப்பியடித்த ஹாலிவுட் படம்) படத்தின் இரண்டாம் ஹீரோ மார்க் மார்கோலிஸ், ஹெக்டர் சாலமன்காவாக வெறும் கண்களிலும் உதடுகளைப் பிதுக்கிக்கொண்டும் நடித்திருக்கும் நடிப்பே அதற்கு மிகப்பெரிய சாட்சி.
நீங்கள் மெட்டி ஒலி ரசிகராக இருந்தாலும் சரி, கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகராக இருந்தாலும் சரி, உங்களுக்கு கண்டிப்பாக பிரேக்கிங் பேட் பிடிக்கும். இனி அப்படி எல்லோருக்கும் பிடித்த சீரிஸ் எடுக்க முடியுமா என்பதுகூட சந்தேகம்தான். பிரேக்கிங் பேட் சீரிஸ் டைரக்டர் வின்ஸ் கில்லிகனின் பெட்டர் கால் சால் கூட இரண்டாம் இடம்தான் பிடிக்க முடியும் என்னுமளவுக்கு அனைவருக்கும் பிடித்ததாய் பிரேக்கிங் பேட் இருந்துள்ளது. உண்மையிலேயே பிரேக்கிங் பேட் GOATதான், Greatest of all Time.

OTT – Netflix